பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுர்ரே (Surrey) நகரில், தனது குடும்பத்தினருடன் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஜேலா சாங் (Jayla Chang), வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஹிட் அண்ட் ரன் (Hit-and-run) முறையில் இடம்பெற்ற இந்த விபத்தில், சிறுமியின் சகோதர, சகோதரிகளும் காயமடைந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு நடந்த இந்த விபத்தில், சிறுமி ஜேலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அன்று மது அருந்தியிருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.
விபத்து நடந்தவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டார்.
தற்போது சுர்ரே பொலிஸ் சேவை (Surrey Police Service), இந்த வழக்கைத் தங்களின் முன்னுரிமைப் பிரிவின் கீழ் மிகத் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், ஓராண்டு கடந்தும் இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாகக் குற்றஞ்சாட்டப்படவில்லை.
தனது மகள் ஜேலாவின் நினைவாக, அவரது தந்தை ஜேம்ஸ் சாங் (James Chang) தினமும் அங்குள்ள நினைவுச் சின்னத்திற்குச் சென்று, சிறுமிக்கு மிகவும் பிடித்தமான ஓரிகாமி (Origami) காகித ரோஜாக்களை வைத்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்.
“எங்கள் உலகம் சிதைந்துவிட்டது, ஜேலாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.










