கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ஒரு அமெரிக்க மாநிலமாக இல்லாமலேயே, மாநிலத்திற்குக் கிடைக்கும் நன்மைகளை கனடா அனுபவிக்க விரும்புகிறது” என்று டிரம்ப் தனது Truth Social பதிவில் தெரிவித்துள்ளார். கனடா பல ஆண்டுகளாக அமெரிக்க விவசாயிகள் மீது அதிக வரிகளை விதித்து வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடா–அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை இரவு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடிய பொருட்கள் மீதான 50 சதவீத அமெரிக்க வரிகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
நூற்றுக்கணக்கான கனடிய பொருட்கள் இந்தப் புதிய வரிகளால் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு 28 பில்லியன் டொலருக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்கா முன்வைத்த இறுதி நிபந்தனைகளை கனடா ஏற்க முடியாது என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய கோரிக்கைகள் பொருளாதார ரீதியாக நியாயமற்றவை என்றும், கனடாவின் இறையாண்மை மற்றும் எதிர்கால வர்த்தக சுதந்திரத்தையே பாதிக்கக்கூடியவை என்றும் கார்னி கூறியுள்ளார்.
குறிப்பாக, கனடா பிற நாடுகளுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் அதிகமாகக் கேட்டார்கள்; மிகக் குறைவாகவே வழங்கினார்கள்” என்பதே கனடிய அரசின் நிலைப்பாடு.
இதையடுத்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கார்னி, கனடிய பேச்சுவார்த்தைக் குழுவையும் Washington-இலிருந்து திரும்ப அழைத்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீது கனடாவும் “Dollar for Dollar” என்ற அடிப்படையில் எதிர் வரிகளை விதிக்கவுள்ளது. கனடாவின் புதிய எதிர் வரிகள் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில், தற்போது கனடாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் திட்டம் இல்லை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்துள்ளார்.
Ontario Premier Doug Ford உள்ளிட்ட பல மாகாண முதல்வர்களும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் விலகிய கனடிய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
