கியூபெக்கில் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவர் தற்போது GTA பகுதியில் இருக்கக்கூடும் என பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!
முதல்நிலை கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் Dylan Denis, GTA பகுதியில் இருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1996 செப்டெம்பர் மாதம் பிறந்த Dylan Denis தற்போது 29 வயதுடையவர். Montréal பொலிஸாரால் அவர் கனடா முழுவதும் செல்லுபடியாகும் பிடியாணையின் கீழ் தேடப்பட்டு வருகிறார்.
2024 ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி Montréal நகரின் Ahuntsic–Cartierville பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக மூவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரான Dylan Denis தலைமறைவாக உள்ளார்.
அவரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலை வழங்குபவர்களுக்கு 100,000 கனடிய டொலர் வரை வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை காணும் பொதுமக்கள் அவரை அணுகவோ அல்லது தாங்களாகவே பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாம் என்றும், அவர் ஆயுதம் வைத்திருக்கக்கூடிய ஆபத்தான நபராக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
