கனடாவில் கோடை காலத்தில் காடுகளுக்கும் திறந்தவெளிப் பகுதிகளுக்கும் செல்வோர், ‘லைம்’ (Lyme) நோயைத் தவிர்த்து மற்றுமொரு டிக் வண்டுக் காய்ச்சல் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனாபிளாஸ்மோசிஸ் (Anaplasmosis) எனப்படும் இந்நோய், கனடாவில் டிக் வண்டுகளால் பரவும் இரண்டாவது முக்கிய நோயாக வேகமாக உருவெடுத்து வருவதாக ‘கனடிய மருத்துவ சங்க இதழ்’ (Canadian Medical Association Journal – CMAJ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருப்புக்கால்களைக் கொண்ட டிக் (Blacklegged ticks) வண்டுகள் கடிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த அறிக்கையில், கிழக்கு ஒன்ராறியோ (Eastern Ontario) கிராமப்புறத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், கடுமையான சோர்வு மற்றும் பலவீனம் காரணமாக பாதிக்கப்பட்டு, பின்னர் இந்நோயினால் இதயத் தசை அழற்சி (Acute Myocarditis) பாதிப்புக்குள்ளானமை விவரிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு டொக்சிசைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் மூலம் 14 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டதை அடுத்து அவர் குணமடைந்துள்ளார்.
காய்ச்சல், பலவீனம், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றன இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்நோய் முற்றினால் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
இதற்குத் தடுப்பூசிகள் எதுவும் இல்லாததால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து டொக்சிசைக்ளின் (Doxycycline) சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
வளர்ப்புப் பிராணிகள் மற்றும் மான்களுடன் நெருங்கிப் பழகுவோர் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, வெளியே செல்லும்போது DEET அடங்கிய பூச்சி விரட்டிகள் மற்றும் உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.










