கனடாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இளைஞர்கள் பலர் நவீன போன்களுக்குப் பதிலாக சாதாரண ‘பிளிப்’ போன்களை (Flip phones) பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, Calgary சேர்ந்த 17 வயது இளைஞரான Jarrett Gross என்பவர், ஸ்மார்ட்போன்களைத் தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டார்.
இதற்காக உளவியலாளர் Dr. Blake Ausmus உடன் இணைந்து, தனது நண்பர்களை இரண்டு மாதங்களுக்கு பிளிப் போன்களைப் பயன்படுத்தச் செய்து, அவர்களின் மூளைச் செயல்பாடுகளை (Brain scans) ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஸ்மார்ட்போன்களைக் கைவிட்டவுடன் அவர்களின் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உடனடியாகக் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மூளையின் முன் பகுதியில் ‘ஆல்பா’ அலைகள் (Alpha brain waves) குறைந்ததன் மூலம், அவர்களின் கவனச்சிதறல் அல்லது மூளை மந்தநிலை (Brain fog) மாறியதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் இந்த மனநலப் பிரச்சினைகள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன.
இந்த மாற்றங்கள் காரணமாக, தற்போது கனடாவில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைய தலைமுறையினரும், தங்கள் பிள்ளைகளை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாக்க நினைக்கும் பெற்றோர்களும் பிளிப் போன்களை நோக்கி மாறி வருவதாக Formidable Wireless நிறுவனத்தின் உரிமையாளர் Jerry Edeh தெரிவித்துள்ளார்.
