ஒன்ராறியோவில் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இனி அதிகபட்ச வேகம் 100 அல்ல, 110 கிலோமீட்டர்!
ஒகஸ்ட் 21 முதல், Highway 400-ல் Highway 401 முதல் Lake Joseph Road வரையான பகுதி, Highway 7, Highway 115 மற்றும் Ottawa பகுதியிலுள்ள Highway 416, 417 ஆகியவற்றின் சில பகுதிகளில் வேக வரம்பு மணித்தியாலத்துக்கு 110 km ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவொரு தற்காலிக மாற்றமல்ல — நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் புதிய வேக வரம்பு.
இதோடு மாற்றங்கள் முடிவடையவில்லை.
ஒகஸ்ட் 31 முதல், Highway 401 மற்றும் Highway 403-ன் மேலும் பல பகுதிகளிலும் 110 km/h வேக வரம்பு அமுலுக்கு வருகிறது.
செப்டம்பர் 30க்குள், Highway 403, 404, 406, 407, 412, 418 மற்றும் Queen Elizabeth Way-வின் சில பகுதிகளுக்கும் இந்த மாற்றம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மொத்தமாக மேலும் 938 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளில் வேக வரம்பு உயர்த்தப்படுவதுடன், செப்டம்பர் இறுதிக்குள் ஒன்ராறியோவின் மாகாண நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 89 சதவீத பகுதிகளில் 110 km/h வேக வரம்பு நடைமுறையில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
