கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய இறக்குமதித் தடையால் கனடிய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Ottawa நகரைச் சேர்ந்த SFR Distillery மதுபான உற்பத்தி நிறுவனம், அமெரிக்க சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் அமெரிக்காவின் புதிய இறக்குமதித் தடையால், அந்நாட்டிற்கு மதுபானங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பொது முகமையாளர் Adam Brierley தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அமெரிக்க சந்தைக்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தமது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
அமெரிக்காவின் இந்தத் தடையானது மதுபானங்கள் (Beer and Alcohol), மோல்ஸ் (Molasses), வே புரோட்டீன் (Whey protein) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல கனடிய பொருட்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச வர்த்தக சட்டத்தரணி Barry Appleton சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, அலுமினியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கனவே சிரமங்களை எதிர்நோக்கி வரும் கனடிய பீர் உற்பத்தியாளர்களும் (Beer Canada) அமெரிக்க சந்தையை இழப்பதால் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
