ஒன்ராறியோவின் மேப்பிள் (Maple) பகுதியில் வசிக்கும் அப்துல் மஜித் (Abdul Majid) என்ற 65 வயது முதியவர், விபத்து ஒன்றிற்குப் பிறகு தனது காப்புறுதி நிறுவனமான CAA Insurance இடம் இழப்பீடு பெறுவதற்கு 8 மாதங்கள் வரை போராட வேண்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வாஹன் (Vaughan) பகுதியில் இவரது கார் விபத்துக்குள்ளாகி முழுமையாகச் சேதமடைந்தது.
விபத்துக்குப் பிறகு மஜித் தனது காப்புறுதி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது கோப்புக்கு நியமிக்கப்பட்ட காப்புறுதி ஆய்வாளர் (Adjuster) வேலையை விட்டு நின்றது தெரியாமல் பல மாதங்கள் கடந்துள்ளன.
காப்புறுதி நிறுவனத்தின் வழிகாட்டல் இல்லாததால், காரை மீட்கவும் சேமித்து வைக்கவும் மஜித் சுமார் $9,940 சொந்தப் பணத்தைச் செலவிட்டுள்ளார்.
காரின் மதிப்பீடு மற்றும் இழுவைக்கட்டணம் தொடர்பாகத் தர்க்கம் எழுந்தபோது, காப்புறுதி நிறுவனம் அவரது வாகனத்தில் கடன் (Lien) இருப்பதாகக் கூறி விசாரணையைத் தள்ளிப்போட்டது.
ஆனால், அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் அத்தகைய கடன் ஏதும் இல்லை என்பது உறுதியானது.
இறுதியில், ஊடகங்களின் தலையீட்டிற்குப் பிறகு, மஜித்தின் வாகனத்திற்கான சரியான சந்தை மதிப்பையும், இழுவைக்கட்டணங்கள் முழுவதையும் வழங்க CAA நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த தாமதத்தினால் தான் மருத்துவச் சிகிச்சைகளைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டதாக மஜித் வேதனை தெரிவிக்கிறார்.
சாதாரண விபத்து இழப்பீடுகள் 2 வாரங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் உடனடியாக அந்த நிறுவனத்தின் குறைதீர்ப்பாளரை (Ombudsperson) அணுகுமாறும் காப்புறுதி பணியகத்தின் (Insurance Bureau of Canada) ஆன் மேரி தாமஸ் (Anne Marie Thomas) அறிவுறுத்தியுள்ளார்.










