கனடாவின் றொரண்டோவில் (Toronto) மூத்த அரசு வழக்கறிஞரான மார்னி கோல்டன்பெர்க் (Marnie Goldenberg) என்பவரின் தொடர்ச்சியான தவறான நடத்தை மற்றும் அலட்சியம் காரணமாக, அவர் கையாண்ட இரண்டாவது வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி (Stay of proceedings) செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023 டிசம்பரில் போதைப்பொருள் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் ‘DRE’ (Drug Recognition Evaluation) வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மார்னி கோல்டன்பெர்க் (Marnie Goldenberg) தவறிவிட்டார்.
அத்தகைய வீடியோ எதுவும் இல்லை என்று அவர் பொய் கூறியதும், பின்னர் ஓராண்டு கால அவகாசம் முடிந்ததால் அந்த வீடியோ தானாகவே அழிந்துபோனதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி சீன் காடெட் (Ontario Court Justice Sean Gaudet), காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞரின் இந்தச் செயல் ‘ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்’ (Unacceptable negligence) என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே கடந்த மே 4 ஆம் தேதி, நீதிமன்ற வராண்டாவில் காவல் அதிகாரி ஒருவரை மார்னி கோல்டன்பெர்க் (Marnie Goldenberg) தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டின் பேரில், நீதிபதி மாரா கிரீன் (Justice Mara Greene) மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்திருந்தார். ஒரே மாதத்தில் இவரது நடத்தையால் தள்ளுபடி செய்யப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.
