மொண்ட்ரியாலில் பயங்கரம் – காற்றில் பறந்த விளையாட்டு உபகரணம் – 3 வயது சிறுமி பலி!

மொண்ட்ரியாலில் (Montreal) வாரயிறுதியில் வீசிய பலத்த காற்றினால் ஊதப்பட்ட விளையாட்டு மரம் (Bouncy Castle) காற்றில் தூக்கி வீசப்பட்டதில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம், இத்தகைய தற்காலிக விளையாட்டு கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மொண்ட்ரியாலின் தென்மேற்கு பகுதியிலுள்ள லாசாலே (LaSalle) வட்டாரத்தில் உள்ள பூங்கா ஒன்றில், உள்ளூர் தேவாலயம் நடத்திய நிகழ்வின் போது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றினால் அங்கிருந்த ஒரு ‘பவுன்சி காஸ்டில்’ மற்றும் ஒரு கூடாரம் (Tent) காற்றில் தூக்கி வீசப்பட்டதில் 11 பேர் காயமடைந்ததுடன், 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கியூபெக்கின் (Quebec) காற்று வீச்சு முன்னறிவிப்பு மணிக்கு 38 கிலோமீட்டரைத் தாண்டினால், இத்தகைய கட்டமைப்புகளை நிறுவவோ இயக்கவோ கூடாது என இந்த உபகரணங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தின் உரிமையாளரான கேத்தி டெனிஸ் (Cathy Denis) தெரிவித்துள்ளார்.

சரியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், திடீர் காற்றழுத்தம் இவற்றை நகர்த்தக்கூடும் என்பதால் இந்த வரம்பு மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு பூங்கா ராட்டினங்கள் போலன்றி, இத்தகைய காற்றினால் ஊதப்படும் விளையாட்டு கட்டமைப்புகள் (Inflatable Play Structures), கட்டிட கட்டுமானங்களை கண்காணிக்கும் மாகாண அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles