அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஒரே மாதத்தில் சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிராம்ப்டணைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
63 வயதான Guramrit Sidhu என்பவருக்கான இந்தத் தீர்ப்பை அமெரிக்க மாவட்ட நீதிபதி John A. Kronstadt வழங்கியுள்ளார்.
இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்ட இவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட Sidhu, 2022 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 523 கிலோகிராம் மெத்தம் பேட்டமைன் மற்றும் 347 கிலோகிராம் கொகைன் ஆகியவற்றை நீண்டதூர லொரிகள் மூலம் கனடாவிற்கு கடத்தியுள்ளார்.
இதற்காக ரகசிய எண்களைக் (Tokens) அடையாளமாகப் பயன்படுத்தி கடத்தல்காரர்களை இவர் இயக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










