கனடாவின் எற்றோபிகோ (Etobicoke) பகுதியில் நள்ளிரவில் கார் ஒன்று பட்டாசு கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால், அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை 427 (Highway 427) மற்றும் ஆல்பியன் வீதிக்கு (Albion Road) அருகில் உள்ள வணிக வளாகப் பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கார் மோதிய வேகத்தில் கடையில் இருந்த பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அனைத்தும் வெடித்துச் சிதறத் தொடங்கின.
இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகையும் தீயும் சூழ்ந்து காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரொறன்ரோ தீயணைப்புப் படையினர், தங்களைச் சுற்றி பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையிலும், ‘4-அலாரம்’ (4-alarm fire) அளவிலான இந்தத் தீவிர தீயை அணைக்கப் போராடினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ அணைக்கப்பட்ட பின்னர் கடையின் உள்ளே கார் ஒன்று சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துப் பொலிஸார் இன்னும் விபரங்களை வெளியிடவில்லை.










