Ontario மாகாணத்தின் Niagara பகுதியில் விடுக்கப்பட்டிருந்த சூறாவளி எச்சரிக்கை, பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குப் பின்னர், St. Catharines, Niagara Falls, Grimsby, Welland உள்ளிட்ட பகுதிகளை நோக்கி கடுமையான இடியுடன் கூடிய மழை நகர்ந்ததைத் தொடர்ந்து, Environment Canada சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
இந்த இடியுடன் கூடிய மழை, சுழற்காற்றை உருவாக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் பலத்த காற்று, பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை, குறுகிய நேரத்தில் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்தில், North Niagara Falls பகுதியில் பலத்த மழை, கடும் காற்று மற்றும் மிகவும் குறைவான பார்வைத்திறன் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்தடைகளும் ஏற்பட்டன.
எனினும், சூறாவளி எச்சரிக்கை பின்னர் நீக்கப்பட்டது. அதேவேளை, Niagara மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கனமழை எச்சரிக்கை தொடர்ந்ததுடன், சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரையான மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சூறாவளி தரையைத் தொட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
