கனடாவில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள், தங்கள் மார்ட்கேஜ் தவணைக் காலம் முடிவடையும் போது அது தானாகவே புதுப்பிக்கப்படும் என்று நம்புகின்றனர்.
ஆனால், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மார்ட்கேஜை கட்டாயம் புதுப்பித்துத் தர வேண்டும் என்ற சட்டபூர்வமான கடமை இல்லை என்று சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிட்டாளரான (CFP®) Christopher Liew எச்சரிக்கிறார்.
வருமானக் குறைவு, மோசமான கிரெடிட் ஸ்கோர் (Credit score) அல்லது கடன் சுமை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மார்ட்கேஜ் புதுப்பித்தல் கோரிக்கைகள் மறுக்கப்படலாம்.
CMHC அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக மார்ட்கேஜ் நிலுவைகள் அதிகரித்து வருகின்றன.
ஒருவேளை மார்ட்கேஜ் புதுப்பித்தல் மறுக்கப்பட்டால், கூட்டாட்சி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடன் நிறுவனங்கள், தவணை முடிவதற்கு 21 நாட்களுக்கு முன்பே அது குறித்து வாடிக்கையாளருக்கு அறிவிக்க வேண்டும்.
மார்ட்கேஜ் மறுக்கப்பட்டதற்கான துல்லியமான காரணத்தைக் கேட்டு, கிரெடிட் அறிக்கைகளில் தவறுகள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.
தற்போதைய வங்கியிடமே மாதாந்திர தவணைக் தொகையைக் குறைக்க அவகாசத்தை நீடிக்குமாறு (Amortization) கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
பிற வங்கிகளை நாடும் முன், கிரெடிட் கார்டு மற்றும் வாகனக் கடன்களைக் குறைத்து, உங்கள் கடன் செலுத்தும் தகுதி விகிதத்தை (Debt service ratios) மேம்படுத்த வேண்டும்.
ஒரு வங்கியில் மறுக்கப்பட்டால், தகுதி விதிகளுக்கு ஏற்ப மாற்று வங்கிகளையோ அல்லது மார்ட்கேஜ் புரோக்கர்களையோ (Mortgage brokers) அணுகலாம்.
இறுதி வாய்ப்பாக ‘B Lenders’ அல்லது தனியாரிடம் குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்குக் கடன் பெற்று, பின்னர் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி முதன்மை வங்கிகளுக்கு மாறலாம்.
எனவே, மார்ட்கேஜ் காலம் முடிவதற்கு 4 முதல் 6 மாதங்களுக்கு முன்பே இதற்கான ஆலோசனைகளைத் தொடங்குவதே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
