கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாண அமைச்சரவையில் இருந்து கரோலின் முல்ரோனி (Caroline Mulroney) ராஜினாமா செய்யவுள்ளார்.
அடுத்த மாதம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (MPP) பதவியையும் துறக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஒன்ராறியோ திறைசேரியின் தலைவராகவும் (President of the Treasury Board), பிராங்கோபோன் விவகாரங்கள் அமைச்சராகவும் (Minister of Francophone Affairs) பணியாற்றி வரும் Caroline Mulroney, எதிர்வரும் ஜூன் 5, வெள்ளிக்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக பதவியில் இருந்து விலகுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை (முன்னாள் பிரதமர் Brian Mulroney) காலமானதும், கடந்த ஆண்டு பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வீட்டை விட்டுச் சென்றதும் (Empty nesters) தனது வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யோர்க்-சிம்கோ (York-Simcoe) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2018 இல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த 8 ஆண்டுகளாக மாகாண அரசில் சட்டமா அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
முதலமைச்சர் டக் போர்ட் (Premier Doug Ford) இவரது முடிவை ஏற்றுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், Caroline Mulroney விலகிய பின், நிதி அமைச்சர் பீட்டர் பெத்லன்பாவ்லி (Peter Bethlenfalvy) தற்காலிகமாக திறைசேரியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என உறுதிப்படுத்தியுள்ளார்.
