கனடாவின் வடக்கு Ontario மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ மற்றும் அபாயகரமான புகைமூட்டம் காரணமாகப் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு Ontario பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவ, Alberta மாகாணம் 94 தீயணைப்பு வீரர்களையும், 2 வாட்டர் பாமர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 13 வான்வழித் தீயணைப்பு கலன்களையும் அனுப்பியுள்ளது.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள First Nations பூர்வகுடி மக்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மாகாண அவசரக்காலத் தயார்நிலை அமைச்சர் Jill Dunlop விடுத்துள்ள கோரிக்கையை அடுத்து, எந்நேரமும் மீட்புப்பணிகளில் ஈடுபடத் தயாராக இருக்கும்படி விமானக் குழுவினருக்கு மத்திய அவசரக்கால முகாமைத்துவ அமைச்சர் Eleanor Olszewski உத்தரவிட்டுள்ளார்.
காட்டுத்தீ பரவி வந்த Armstrong பகுதிக்குள் அனுப்பப்பட்டதால் புகையினால் பாதிக்கப்பட்ட CN Railway ரயில் ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு கருதி இப்பகுதியில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பால் எழுந்துள்ள அடர்ந்த புகைமூட்டம் காரணமாக Toronto, Thunder Bay, Kingston, London மற்றும் Windsor ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த எச்சரிக்கை நிலை அமெரிக்காவின் வடக்குப்பகுதிகள் வரை நீடித்துள்ளது.
