கனடாவின் பொது எச்சரிக்கை கட்டமைப்பான ‘அலர்ட் ரெடி’ (Alert Ready), நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று தனது வழக்கமான சோதனையை முன்னெடுக்கவுள்ளது.
இன்று மதியம் வரையிலான குறிப்பிட்ட நேரங்களில், கனேடியர்களின் தொலைக்காட்சி, வானொலி மற்றும் அவற்றுடன் ஒத்துப்போகும் நகர்பேசிகளில் (Wireless devices) இந்த எச்சரிக்கை ஒலி மற்றும் சோதனைச் செய்தி ஒளிபரப்பப்படும்.
கியூபெக் (Quebec) மற்றும் சஸ்காட்சுவான் (Saskatchewan) ஆகிய மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் இன்று இச்சோதனை நடத்தப்படும்.
ஒன்ராறியோ (Ontario) மாகாணத்திற்கான சோதனை எதிர்வரும் வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளது.
அவசர காலங்களில் இக்கட்டமைப்பு சரியாக இயங்குவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்தச் சோதனைச் செய்திகளையோ அல்லது உண்மையான அவசர கால எச்சரிக்கைகளையோ ஒரு பயனர் தனது சாதனத்தில் வராதவாறு முடக்குவதற்கு (Opt out) எவ்வித வாய்ப்பும் இல்லை.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி நிலவரப்படி, ஆம்பர் அலர்ட் (Amber Alerts), சூறாவளி எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு அவசர நிலைகளுக்காக இக்கட்டமைப்பு மூலம் 28 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தானியங்கி எச்சரிக்கை ஒலியைக் கேட்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், இது ஒரு வழக்கமான பாதுகாப்புச் சோதனையே எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
