கணையப் புற்றுநோயைக் (Pancreatic cancer) குணப்படுத்துவதில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படும் புதிய மாத்திரை ஒன்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இது இன்னும் கனடியர்களுக்குக் கிடைக்கவில்லை.
டராக்சோன்ராசிப் (daraxonrasib) என்ற இந்த பரீட்சார்த்த மாத்திரை, நோயாளிகளின் உயிர்வாழும் காலத்தை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இது கணையப் புற்றுநோயில் ஏற்படும் ‘RAS’ மரபணு மாற்றத்தைக் குறிவைத்துச் செயல்படும் முதல் மருந்தாகும்.
றொரண்டோவில் உள்ள பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் மையத்தின் (Princess Margaret Cancer Centre) மருத்துவப் பணிப்பாளர் மருத்துவர் ஜெனிபர் நாக்ஸ் (Dr. Jennifer Knox) இது குறித்துப் பேசுகையில், “இது கணையப் புற்றுநோய் சிகிச்சையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் ரெவலூஷன் மெடிசின்ஸ் (Revolution Medicines) நிறுவனம், முதலில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதலுக்கே விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவில் உருவாக்கப்படும் மருந்துகள் பொதுவாக அந்நாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும்.
இந்த மருந்துக்கான பாதுகாப்பு ஒப்புதலைக் கோரி கனடா சுகாதாரத் திணைக்களத்திற்கு (Health Canada) இன்னும் விண்ணப்பிக்கப்படவில்லை.
வழக்கமான கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சையில் 6 மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில், இந்த மாத்திரையை உட்கொண்ட நோயாளிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர்வாழ்ந்துள்ளனர்.
கனடாவில் 2026 ஆம் ஆண்டில் 7,500 பேர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்றும், அதில் 6,500 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் கனடிய புற்றுநோய் சங்கம் (Canadian Cancer Society) மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மருந்து விரைவில் கனடாவுக்கு வரும் என மருத்துவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
