ஒஷாவாவில் (Oshawa) உள்ள காபி கடைக்கு வெளியே நடந்த மோதலில் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிராம்ப்டனைச் (Brampton) சேர்ந்த 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 8:10 மணியளவில் சிம்கோ ஸ்ட்ரீட் நார்த் (Simcoe Street North) மற்றும் வின்செஸ்டர் ரோட் ஈஸ்ட் (Winchester Road East) சந்திப்பில் உள்ள டிம் ஹார்டன்ஸ் (Tim Hortons) அருகே இந்த மோதல் நிகழ்ந்தது.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது 2026 ஆம் ஆண்டில் டர்ஹாம் பிராந்தியத்தில் (Durham Region) பதிவான மூன்றாவது கொலைச் சம்பவமாகும்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர்களில் ஒருவரான 16 வயது சிறுவன், திங்கட்கிழமை அன்று ஒஷாவா பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்தான்.
அவன் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட மோதல் என்றும், பொதுமக்களுக்கு மேலதிக ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே 9 ஆம் திகதி இரவு அந்தப் பகுதியில் இருந்தவர்கள், தங்களிடம் உள்ள வீடியோ பதிவுகளை வழங்கி உதவுமாறு பொலிஸ் துப்பறியும் அதிகாரி லாரா மிடில்டன் (Det. Laura Middleton) கோரிக்கை விடுத்துள்ளார்.










