ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கஞ்சா விற்பனை நிலையங்கள், தற்போது காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வேலை நேரத்தை மாற்றியமைத்து, காலை 7 மணிக்கே கடைகளைத் திறக்க அனுமதிக்கும் புதிய யோசனையை ஒன்டாரியோவின் சட்டமா அதிபர் அமைச்சு (Ministry of the Attorney General) முன்வைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், மதுபான விற்பனை நிலையங்களின் வேலை நேரத்துடன் கஞ்சா கடைகளின் நேரத்தை ஒத்திசைப்பதாகும்.
இதன் மூலம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை கிடைப்பதுடன், அவர்களின் இலாபத்தை அதிகரிக்கவும் இது உதவும் என அரசு நம்புகிறது.
மேலும், சட்டவிரோதச் சந்தையில் கஞ்சா விற்பனையாவதைக் கட்டுப்படுத்தி, மக்கள் சட்டப்பூர்வமான கடைகளை நாடுவதை ஊக்குவிப்பதன் மூலம் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இருப்பினும், கஞ்சா விநியோக நேரங்கள் (Delivery hours) மாற்றமின்றி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே தொடரும்.
இந்த மாற்றம் குறித்துப் பொதுமக்கள் ஏப்ரல் 24, 2026 வரை தங்கள் கருத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.










