Toronto நகரின் மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான Yonge Street – College Street சந்திப்பு, TTC தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகளுக்காக பகுதியளவில் மூடப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் திகதி காலை 6 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள இந்தப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், Yonge Street வழியாக வடக்கு மற்றும் தெற்கு நோக்கி சந்திப்பைக் கடந்து செல்ல முடியாது. எனினும், வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படும்.
College மற்றும் Carlton Streets வழியாக கிழக்கு நோக்கி ஒரு வாகனப் பாதை மட்டும் திறந்திருக்கும். மேற்கு நோக்கிப் பயணிப்பதற்கும், சந்திப்பில் இடதுபுறம் திரும்புவதற்கும் அனுமதி இல்லை.
இதனால் Downtown Toronto பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதங்கள் ஏற்படக்கூடும். இந்தப் பகுதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளைத் தெரிவுசெய்து, பயணத்திற்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
