Scarborough பகுதியில் வீட்டின் driveway-இல் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருட சிலர் முயன்ற சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும், அந்த வீட்டில் வசிக்கும் 37 வயது நபர் மீது Toronto Police குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை சுமார் 2.41 மணியளவில், Kingston Road மற்றும் McCowan Road பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அடையாளம் தெரியாத சிலர் வீடு ஒன்றின் driveway-இல் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருட முயன்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தச் சம்பவத்தின் போது வீட்டில் வசித்த ஒருவர் வெளியே வந்து துப்பாக்கியால் சுட்டதாக Toronto Police தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அருகிலிருந்த மற்றுமொரு வீடு துப்பாக்கிச் சூட்டினால் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை திருட முயன்ற சந்தேக நபர்கள், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, வீட்டில் வசித்த 37 வயதான Francis Betinvieh மீது கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் துப்பாக்கியை சுட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் புதன்கிழமை பிற்பகல் நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரானதுடன், 2,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது, தனது firearm certificate மற்றும் தொடர்புடைய அனுமதிகளை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒரு முக்கியமான விடயம் தற்போது கவனம் பெறுகிறது.
தனது வீட்டின் driveway-இல் வாகனம் திருடப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட சூழலில் துப்பாக்கியை பயன்படுத்தியதாகக் கூறப்படும் நபரே தற்போது குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்; அதேவேளை வாகனத்தை திருட முயன்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.
