கனடாவின் North York பகுதியில் உள்ள இல்லமொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.
Yonge Street மற்றும் Sheppard Avenue சந்திப்பிற்கு அருகிலுள்ள Glendora Avenue-இல் அமைந்துள்ள வீடொன்றில், அதிகாலை 3:40 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் முதலுதவிப் பிரிவினர், கத்திக்குத்துக்கு இலக்கான இரண்டு பெண்களையும் ஆணொருவரையும் மீட்டனர்.
பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய சந்தேக நபரை பொலிசார் விரைந்து செயற்பட்டுக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் மற்றும் சந்தேக நபரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதலுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார், தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.










