றொரண்டோவில் (Toronto) உள்ள லீசைட் பாலத்தில் (Leaside Bridge) தற்காலிக பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்கவுள்ளன.
2024 ஆம் ஆண்டு தந்தையர் தினத்தன்று இப்பாலத்திலிருந்து ஒருவர் குதித்து விழுந்ததில், கீழே காரில் பயணித்த 76 வயதான ஹரோல்ட் லஸ்ட்ஹவுஸ் (Harold Lusthouse) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாலத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரி அவரது குடும்பத்தினர் மாமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பாஸ்டர்நாக் (James Pasternak) உதவியுடன் தீவிரமாகப் போராடி வந்தனர்.
இதன் பலனாக, 2.4 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த தற்காலிக வேலி அமைக்கும் பணிக்கு றொரண்டோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.
வளைந்த உலோக சட்டங்கள் மற்றும் கம்பி வலைகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த தற்காலிக வேலி, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் இரண்டு கட்டங்களாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, லீசைட் பாலத்தில் 8 முதல் 9 மில்லியன் டொலர் செலவில் நிரந்தர பாதுகாப்பு வேலியை அமைப்பதற்குக் கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், அந்தப் பணிகள் 2037 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும் என நகர சபை அறிக்கை தெரிவித்துள்ளது.
