FIFA உலக கிண்ணப் போட்டிகளை கருத்தில் கொண்டு, கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயின் அவசர கால திருத்தப்பணிகள் –  ஏப்ரலில் நிறைவுறும்!    

டொரண்டோவின் முக்கிய போக்குவரத்து பாதையான Gardiner Expressway இல், கட்டமைப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையிலான சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு அவசர கால திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கமான ஆய்வுகளின் போது, பாலத்தின் அடிப்பகுதியில் (Soffit) கடுமையான பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது.

இதனால், ஒரு அவசர நிலையைக் கருத்திற்கொண்டு, போட்டி ஒப்பந்தப்புள்ளிகள் இன்றி $4 மில்லியன் மதிப்பிலான நேரடி ஒப்பந்தத்தை City of Toronto வழங்கியுள்ளது.

இந்த சிதைவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேயர் Olivia Chow, இந்த பழைய நெடுஞ்சாலைக்கு மேலேயும் கீழேயும் பாரிய திருத்தப்பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குளிர்கால பனி மற்றும் சாலைகளில் பயன்படுத்தப்படும் உப்பு, கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளை விரைவாக சிதைப்பதாக பொறியியல் பேராசிரியர் Shamim Sheikh எச்சரித்துள்ளார்.

இந்த கோடையில் நடைபெறவுள்ள FIFA World Cup கால்பந்து போட்டிகளின் போது ஏற்படவுள்ள கடும் போக்குவரத்து நெரிசலையும், Fort York மற்றும் The Bentway பகுதிகளில் கூடவுள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையான பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles