Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
Calgary மேயர் Jeromy Farkas, Alberta ஒன்றுபட்ட கனடாவின் ஒரு பகுதியாக தொடர வேண்டும் என்பதை Calgary நகர சபை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறார்.
இதற்காக அவசர தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது அல்லது சிறப்பு நகர சபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார். ஆனால் நகர சபை உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஆதரிக்கவில்லை.
சில நகர சபை உறுப்பினர்கள் இதனை ஆதரிக்கும் நிலையில், மற்றவர்கள் இது மாகாண அரசியல் விவகாரம் என்றும் நகர சபை இதில் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எடுக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், University of Calgary-யின் School of Public Policy வெளியிட்ட புதிய ஆய்வில், Alberta தனிநாடாக மாறும் பட்சத்தில் முதல் ஐந்து ஆண்டுகளில் புதிய நாட்டை உருவாக்குவதற்கான செலவுகள் 50 பில்லியன் முதல் 170 பில்லியன் டொலர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்கால கொள்கை முடிவுகளைப் பொறுத்து விளைவுகள் மாறுபடலாம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
