கனடாவில் துப்பாக்கிகளுக்கான தடைக்கு எதிராக வழக்கு!

cbc

கனடா மத்திய அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரக துப்பாக்கிகளுக்கு விதித்த தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடர்பான விசாரணை கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Canada) திங்கள்கிழமை தொடங்கியது.

கடந்த 2020 மே மாதத்தில், ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற ஏஆர்-15 (AR-15) மற்றும் ரூகர் மினி-14 (Ruger Mini-14) உள்ளிட்ட 1,500 க்கும் மேற்பட்ட துப்பாக்கி மாடல்களின் பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

தற்போது இத்தடைப் பட்டியலில் 2,500 க்கும் மேற்பட்ட தாக்குதல் ரகத் துப்பாக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தடை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, கனடிய துப்பாக்கி உரிமை கூட்டணி (Canadian Coalition for Firearm Rights), துப்பாக்கி உரிமையாளர்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் தொடர்ந்த வழக்கினை கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Federal Court of Appeal) ஆகியவை தள்ளுபடி செய்தன.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இத்தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2027 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபிராம்ப்டன் Stellantis ஆலையை விற்பனை – 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Next articleடொராண்டோ வீட்டுச் சந்தையில் மீண்டும் நிச்சயமற்ற நிலை!