OSAP நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தம்! மாணவர்களுக்கு மின்னஞ்சல்!

cp24

தனியார் தொழிற்கல்விக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான OSAP நிதியுதவிக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்புகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், தமது கல்வியை எவ்வாறு தொடர்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்ராறியோவில் சில தனியார் தொழிற்கல்விக் கல்லூரிகளில் OSAP நிதியைப் பயன்படுத்துவதில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலியான அல்லது சந்தேகத்திற்குரிய மாணவர் பதிவுகள், மாணவர்கள் உண்மையில் கல்வி கற்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள், குடிவரவு சேவை நிறுவனங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஒன்ராறியோ அரசாங்கம் இந்த விவகாரத்தை மாகாணப் பொலிஸாரான OPP-யிடம் ஒப்படைத்துள்ளது.

KPMG நிறுவனத்தின் தணிக்கையும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

2024–2025 கல்வியாண்டில், ஏழு தனியார் தொழிற்கல்விக் கல்லூரிகளுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மட்டும் சுமார் 385 மில்லியன் டொலர் OSAP மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், OSAP நிதியுதவி பெறத் தகுதியுடைய 242 தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் சில கல்வி நிறுவனங்கள் மீது எழுந்துள்ளபோதிலும், நிதி இடைநிறுத்தம் ஏனைய மாணவர்களையும் பாதித்துள்ளது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்காவது நிதியுதவியை மீண்டும் வழங்க வேண்டும் என Career Colleges Ontario கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், குறைந்த வட்டியில் மாற்றுக் கடன் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் நோலன் குவின் தெரிவித்துள்ளார்.

ஆனால், OSAP கொடுப்பனவுகள் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

OSAP நிதியுதவியை நம்பியுள்ள மாணவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்த்து, கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Previous articleகனடாவில் தொடர்ச்சியாக 2வது ஆண்டாகக் குறைந்த வாடகைக்கட்டணம் – புதிய அறிக்கை தகவல்!
Next articleகனடாவில் வாகனம் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!