ரஷ்யாவில் பிளேக் (Plague) நோய்க்கிருமிகளை ஆய்வு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான ‘டாரியா ஷிபிலோவா’ (Daria Shipilova) என்ற இளம் ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர், தீவிர நுரையீரல் அழற்சியால் (Pneumonia) உயிரிழந்துள்ளார்.
‘இர்குட்ஸ்க்’ (Irkutsk) பகுதியில் அமைந்துள்ள ‘ஷெலிகோவ்’ (Shelekhov) மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் சோதனைக்குழாய் உடைந்ததால் ‘நுரையீரல் பிளேக்’ (Pneumonic plague) கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட செய்திகள் வெளியாயின.
இருப்பினும், அவர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், ஆய்வுக்கூடத்தில் விபத்து எதுவும் நடக்கவில்லை என்றும் ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ‘கனடா பொது சுகாதார முகவரகம்’ (Public Health Agency of Canada – PHAC), இதனால் கனடாவிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் அல்லது ஆபத்தும் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளது.
கனடாவில் கடைசியாக 1939 ஆம் ஆண்டிலேயே பிளேக் நோய் பதிவாகியிருந்தது.
அத்துடன், பிளேக் நோய் பாக்டீரியாவால் (Bacteria) ஏற்படுவதால், இதை ஆண்டிபயாடிக் (Antibiotics) மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்றும், இது கோவிட்-19 (COVID-19) போல வேகமாகப் பரவும் நோயல்ல என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
