பிரபல பாடகி Taylor Swift-இன் ‘Eras Tour’ இசை நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை விற்று, 107 வாடிக்கையாளர்களிடம் இருந்து $265,000-க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வழக்கில் Denise Tisor மற்றும் அவரது கூட்டாளி David Blake ஆகிய இருவர் Milton நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
Southern Ontario பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட Tammy Allen போன்ற பலரும், Denise Tisor தங்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரை நம்பி ஏமாந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசாக வழங்குவதற்காக வாங்கிய இந்த டிக்கெட்டுகள் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மோசடி செய்த பணத்திலிருந்து $139,000-க்கும் அதிகமான தொகையை இவர்கள் இருவரும் ஆன்லைன் சூதாட்டங்களில் பயன்படுத்தியதும், ATM-கள் மூலம் $297,000-க்கும் அதிகமான பணத்தை எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆன்லைனில் Denise Blakhawk என்ற பெயரில் செயல்பட்ட Denise Tisor, தனது தீவிர சூதாட்ட அடிமைத்தனமே இதற்கு காரணம் என்று கூறி முகநூலில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
எனினும், இந்த ஜோடிக்கான தண்டனை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
