ஒன்டாரியோவின் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களின் வாகனக் காப்புறுதி (Insurance claim) நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது மிர்சா (Mohamed Mirza) மற்றும் விவி மிர்சா (Vivi Mirza) தம்பதியினரின் மகன் ஆடம் மிர்சா (Adam Mirza), தற்காலிகமாக பெற்றோரின் வீட்டில் குடியேறியுள்ளார்.
அவர் பெற்றோரின் காரை மருத்துவத் தேவைக்காக இரவல் வாங்கிச் சென்றபோது கடுமையான விபத்துக்குள்ளானார்.
எனினும், மகன் தங்கள் காப்புறுதிப் பத்திரத்தில் (Policy) சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தினால், வாவனேசா (Wawanesa) காப்புறுதி நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்துள்ளது.
கார் வாங்கும் போது மகன் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசித்ததாகவும், அவர் தங்களுடன் குடியேறியதை காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவிக்கத் தவறியதாகவும் தம்பதியினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான 2019 ஆம் ஆண்டு தயாரிப்பான மிட்சுபிஷி ஆர்விஆர் எஸ்இ (2019 Mitsubishi RVR Se) காரை வாங்குவதற்காகப் பெற்ற கடனில் இன்னும் 26,000 டாலர்களை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது கார் இல்லாத நிலையிலும், அவர்கள் மாதாந்தத் தவணையைச் செலுத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களின் வீட்டு மற்றும் ஏனைய வாகனக் காப்புறுதிகளையும் குறித்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இது குறித்து கனடா காப்புறுதிப் பணியகத்தின் (IBC) பணிப்பாளர் ஆனி மேரி தோமஸ் (Anne Marie Thomas) கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு வீட்டில் வசிக்கும் மற்றும் வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தும் உரிமம் பெற்ற அனைத்து சாரதிகளின் விபரங்களும் காப்புறுதிப் பத்திரத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
இல்லையெனில் அது விதிகளின்படி பெரிய மாற்றமாகக் கருதப்பட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம்” என எச்சரித்துள்ளார்.
