றொரண்டோ மற்றும் தெற்கு ஒன்றாரியோ பிராந்தியங்களில் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஒரு கடுமையான வெப்ப அலை (Heat event) ஆரம்பமாகவுள்ளதாக Environment Canada (கனடா சுற்றுச்சூழல் துறை) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முறை பகல் நேர வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் செல்சியஸ் வரையும், ஈரப்பதத்தின் தாக்கம் (Humidex) 45 வரையும் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த வெப்ப அலையின் உச்சக்கட்ட நாளாக இருக்கும் என்றும், இரவு நேரத்திலும்கூட வெப்பநிலை 20 பாகை செல்சியஸ்க்கு கீழ் குறையாது என்பதால் மக்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் காற்றின் தரம் மோசமடைய வாய்ப்புள்ளதால், முதியவர்கள் மற்றும் தனியாக வசிப்போரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த Toronto (றொரண்டோ) மாநகர சபை அவசர வெப்ப நிவாரண திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
இதன்படி Nathan Phillips Square, Mel Lastman Square, East York Civic Centre மற்றும் Barbara Hall Park ஆகிய இடங்களில் நடமாடும் குடிநீர் விநியோக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், 500-க்கும் மேற்பட்ட குளிர்ச்சியான தங்குமிடங்கள் (Cool spaces) மற்றும் 170-க்கும் அதிகமான நீரூற்று மைதானங்கள் (Splash pads) திறக்கப்பட்டுள்ளதோடு, Alex Duff, Monarch Park, Sunnyside Gus Ryder உள்ளிட்ட 8 முக்கிய நீச்சல் குளங்கள் நீடிக்கப்பட்ட நேரத்துடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
