மொண்ட்ரியலுக்கு (Montreal) வடக்கே உள்ள Repentigny நகரின் Le Gardeur பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 4:30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Le Bourg-Neuf Blvd. மற்றும் Émile-Genest St. சந்திப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனால், சுமார் 20 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு சிதறிக் கிடக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிரிழப்புகளும் இல்லை.
நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் எதுவும் கசிந்ததாக தகவல் இல்லை என CN Rail மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.
சுற்றியிருந்த சுமார் 200 வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தற்போது நிலைமை சீராக இருப்பதால், அவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு, இடிபாடுகளை அகற்றும் பணிகளும், விபத்துக்கான காரணம் குறித்த மத்திய அளவிலான விசாரணையும் நடைபெற்று வருகின்றன.
அப்பகுதி வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










