ரோஜர்ஸ் ஸ்டேடியம் சத்தத்தினால் அருகில் வசிப்பவர்கள் இன்னும் பாதிப்பு!

றொரண்டோ (Toronto) நகரின் ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் (Rogers Stadium) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற போஸ்ட் மலோன் (Post Malone) மற்றும் ஜெல்லி ரோல் (Jelly Roll) ஆகியோரின் இசை நிகழ்ச்சியால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் சத்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சத்த அளவுகள் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சத்தம் வெளியே பரவாமல் தடுக்க ஒலியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அதன் ஏற்பாட்டாளர்களான லைவ் நேஷன் (Live Nation) நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

எனினும், இந்த ஆண்டு புருனோ மார்ஸ் (Bruno Mars) நிகழ்ச்சியுடன் சீசன் தொடங்கியதில் இருந்தே, நார்த் யார்க் (North York) மட்டுமன்றி வான்கா (Vaughan) வரை வசிக்கும் மக்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்பதாகப் புகார் அளித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ச்சி இந்த ஆண்டின் மிக அதிக சத்தம் கொண்டதாகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த சத்தம் அனுமதிக்கப்பட்ட சட்ட வரம்புகளை மீறவில்லை என லைவ் நேஷன் (Live Nation) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுன்சிலர் ஜேம்ஸ் பாஸ்டர்னாக் (James Pasternak), சத்தம் சட்ட வரம்பிற்குள் இருந்தாலும் மக்கள் அதை விரும்பவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டேடியத்தில் மேலும் சத்தத்தைக் குறைக்கும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles