கனடாவின் பி.சி. (B.C.) மாகாணத்தில் உள்ள Cultus Lake Waterpark நீர் பூங்காவிற்கு சுற்றுலா சென்ற Minnekhada Middle School பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பு காரணமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை 11:20 மணியளவில் Chilliwack அருகே உள்ள இந்த பூங்காவில் மாணவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு இரும்பு கைப்பிடியை (Railing) தொட்டதில் இந்த மின்சார பாதிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் தண்ணீருக்குள்ளோ அல்லது சவாரிகளிலோ இல்லாதபோது இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் குழுவினர், காயமடைந்தவர்களில் இருவரை ஹெலிகாப்டர் (Air Ambulance) மூலமாகவும், மற்ற 10 பேரை தரைவழி ஆம்புலன்ஸ் மூலமாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாணவர்களின் காயங்கள் தீவிரமானவை என்றாலும், உயிருக்கு ஆபத்து இல்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூங்காவின் நிர்வாக அதிகாரி Andrew Steunenberg கூறுகையில், இது ஒரு எதிர்பாராத விபத்து என்றும், பூங்கா குறைந்தது 48 மணிநேரத்திற்கு மூடப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
BC Hydro நிறுவனம் நடத்திய முதற்கட்ட ஆய்வில், இந்த மின் கோளாறு பூங்காவின் உட்புற மின் அமைப்பிலேயே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
