கனடாவில் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு கனடியர்களுக்குத் தொடர்ந்து சுமையாகவே இருந்துள்ளது.
கடைகளில் வாங்கப்படும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 3.5% அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரக் கனடா (Statistics Canada) தெரிவித்துள்ளது.
வட அமெரிக்காவில் கால்நடைகளின் தட்டுப்பாடு காரணமாக மாட்டு இறைச்சியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ‘Beef Striploin’ ஒரு கிலோவுக்கு $9.61 அதிகரித்து $42.42 ஆகவும், ‘Ground Beef’ ஒரு கிலோவுக்கு $1.42 அதிகரித்து $15.59 ஆகவும் விற்பனையாகிறது.
வறட்சி மற்றும் தீவனச் செலவு அதிகரிப்பே இதற்கு முதன்மைக் காரணம்.
உற்பத்தி நாடுகளின் மோசமான அறுவடை மற்றும் விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால், 340 கிராம் காப்பித் தூள் பாக்கெட் விலை கடந்த ஆண்டை விட 20.69% ($1.61) அதிகரித்து $9.39 ஆக உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு 7.8% அதிகரித்துள்ளது.
உதாரணமாக, ஒரு கிலோ தக்காளி விலை $4.69 இல் இருந்து $6.18 ஆக உயர்ந்துள்ளது.
‘Infant Formula’ (குழந்தைகளுக்கான பால் மாவு) $49.72 ஆகவும், சல்மன் மீன் (Salmon) ஒரு கிலோ $28 ஆகவும், 3 லீற்றர் கனோலா எண்ணெய் (Canola Oil) $10.06 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
ஒட்டுமொத்த கனடாவின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.4% ஆக இருந்த நிலையில், ஏப்ரலில் 2.8% ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










