தெற்கு ஒண்டாரியோ (southern Ontario) முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களைத் திருடிய குற்றச்சாட்டில், 7 பதின்மவயதினர் (teens) உட்பட 9 சந்தேகநபர்களை Niagara Regional Police பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2025 ஏப்ரலில் Lexus ரக வாகனம் ஒன்று திருடப்பட்டதை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை, பின்னர் ஒரு பெரிய திட்டமிட்ட குற்றவியல் வலையமைப்பைக் கண்டறியும் விசாரணையாக மாறியது.
Project Jack Links எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட விசாரணையின் மூலம், சர்வதேச சந்தைகளில் மறுவிற்பனை செய்வதற்காக அதிநவீன Lexus மற்றும் Toyota ரக வாகனங்களை இலக்கு வைத்து திருடும் பல சுயாதீன குழுக்களைப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
Niagara பிராந்தியம் மட்டுமன்றி GTHA, Brantford, London, Waterloo மற்றும் Cambridge ஆகிய பகுதிகளிலும் இவர்கள் மூலம் 112 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டுள்ளதுடன், இதன் மொத்த மதிப்பு 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் St. Catharines ஐச் சேர்ந்த இருவர் ஜனவரியிலும், Hamilton ஐச் சேர்ந்த இருவர் ஏப்ரலிலும் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 14 அன்று Mississauga மற்றும் Oakville பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் மேலும் ஐந்து பதின்மவயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Youth Criminal Justice Act சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட சிறுவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் இருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
