கனடாவில் வசிக்கும் சீன நாட்டவர்களை சீனா பொலிஸார் ரகசியமாகத் துன்புறுத்தி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் RCMP அதிகாரியான வில்லியம் மேஜர் (William Majcher) மீதான வெளிநாட்டுத் தலையீடு தொடர்பான வழக்கில், குறைந்தது 25 கனடிய குடியிருப்பாளர்கள் சீனப் பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், “ஆபரேஷன் பாக்ஸ் ஹண்ட்” (Operation Fox Hunt) என்ற திட்டத்தின் கீழ், நிதிக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சீனர்களை கனடாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தச் சீனப் பொலிஸார் முயன்றுள்ளனர்.
இதில் வன்கூவரைச் சேர்ந்த கெவின் சன் (Kevin Sun) என்பவரை சீனாவுக்குத் திருப்பியனுப்ப மேஜர் உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு, சீனாவுக்குத் திருப்பியனுப்பப்படும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
றொரண்டோவில் (Toronto) வசிக்கும் முன்னாள் சீன நீதிபதி ஒருவரை மிரட்டுவதற்காக, சீனாவில் உள்ள அவரது சகோதரியைச் சிறையிலடைத்து, மகனைக் கடத்திய சம்பவமும் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ததோடு, RCMP மற்றும் சீனாவின் MPS இடையே குற்றங்களைத் தடுக்க புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் (MOU) கையெழுத்திட்டுள்ளார்.
சீனப் பொலிஸார் கனடிய சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், இந்த புதிய ஒப்பந்தத்தின் விபரங்களை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இந்த விவகாரம் கனடாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த சமூகத்தினரிடையே, குறிப்பாக ஹொங்கொங் மற்றும் சீன எதிர்ப்பாளர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.










