கனடாவின் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள், இத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக் கோரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Unifor, United Steelworkers மற்றும் CUPE உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கனடிய தொலைத்தொடர்பு தொழிலாளர் கூட்டணி (Canadian Telecommunications Workers’ Alliance), ஒட்டாவாவில் (Ottawa) உள்ள நாடாளுமன்றக் குழுவிடம் தமது கவலைகளை முன்வைத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அழைப்பு நிலைய ஊழியர்களின் பேச்சு வழக்கை (Accents) மாற்றி, அவர்கள் கனடாவில் இருப்பதைப் போன்ற விம்பத்தை ஏற்படுத்த சில நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக Unifor பணிப்பாளர் ரோச் லெப்லாங்க் (Roch Leblanc) குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழியர்களின் நடமாட்டம் மற்றும் வேலை நேரத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க AI பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழியர்களுக்கு உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 20,000 வேலைகள் தானியங்கி முறை மற்றும் வெளிநாட்டு அவுட்சோர்சிங் காரணமாக இழக்கப்பட்டுள்ளன.
AI பயன்பாடு இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் என சங்கங்கள் அஞ்சுகின்றன.
புதிய தேசிய AI உத்தியை வகுக்கும் போது, தொழிலாளர் சந்தையில் அதன் தாக்கங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் (Evan Solomon) தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுடன் பேசும்போது AI பயன்படுத்தப்பட்டால் அது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிரந்தர மத்திய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
