கனடாவின் பொதுத்துறையில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் விபரம் வெளியானது!

ஒன்டாரியோ மாகாணத்தில் ஆண்டுக்கு 100,000 டொலர்களுக்கும் அதிகமாகச் சம்பளம் பெறும் பொதுத்துறை ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய 2025 ஆம் ஆண்டிற்கான ‘சன்ஷைன் லிஸ்ட்’ (Sunshine List) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஒன்டாரியோ பவர் ஜெனரேஷன் (Ontario Power Generation) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கென்னத் ஹார்ட்விக் (Kenneth Hartwick) 1.9 மில்லியன் டொலர் சம்பளத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நிக்கோல் புட்சர் (Nicolle Butcher) 1.6 மில்லியன் டொலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) கடந்த ஆண்டு 269,567 டொலர்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) 240,349 டொலர்களைப் பெற்றுள்ளார். இருப்பினும், மாகாணத்திலேயே அதிக சம்பளம் பெறும் மேயராக மார்க்கம் (Markham) மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி (Frank Scarpitti) 308,179 டொலர்களுடன் விளங்குகிறார்.

பொலிஸ் துறையில் பீல் (Peel) பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா (Nishan Duraiappah) ஏனையோரை விட அதிகபட்சமாக 604,449 டொலர்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 404,922 ஆக உயர்ந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 100,000 டொலர் என்ற வரம்பு இதுவரை மாற்றப்படாததே இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இப்பட்டியலில்  அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தாதியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles