கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாதையோர புதரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ‘பேபி பார்கர்’ (Baby Parker) என்ற ஆண் குழந்தையின் தாய், 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது 39 வயதாகும் அந்தப் பெண், இறந்துபோன குழந்தையின் உடலை மறைத்து வீசியதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட இவர் மீது உடலை அவமதித்தல் மற்றும் மறைத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மரபணு தொழினுட்பம் (DNA technology) மூலமாகவே பொலிஸார் இவரைக் கண்டறிந்தனர்.
குழந்தை பிறந்த அன்றைய இரவில் நடந்த சம்பவங்கள் குறித்து நினைவில்லை என அவர் கண்ணீருடன் தெரிவித்த போதிலும், நீதிபதி எலிசபெத் வில்சன் (Justice Elizabeth Wilson) முன்னிலையில் குற்றவாளியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
நீதிமன்றத்தின் வெளியீட்டுத் தடையால் (publication ban) தாயின் பெயர் மறைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் அறிவிக்கப்படவுள்ளன.
