12 ஆண்டுகளின் பின் அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல்!

கனடா தனது இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான ‘HMCS Corner Brook’ ஐ, ஹவாயில் (Hawaii) நடைபெறும் இந்த ஆண்டுக்கான ‘ரிம்பக்’ (RIMPAC) கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தவுள்ளது.

சுமார் 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, கனடா தனது நீர்மூழ்கிக் கப்பலை இந்த பல்தேசியப் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் செய்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான இந்த நீர்மூழ்கிக் கப்பல், சுமார் 90,000 மணித்தியாலங்கள் தீவிரப் பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது.

ஜூன் 24 முதல் ஜூலை 31 வரை நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய இந்த கடற்படைப் பயிற்சியில் 31 நாடுகளைச் சேர்ந்த 25,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், 40 போர்க்கப்பல்கள் மற்றும் 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன.

கனடா இதற்காக தனது நீர்மூழ்கிக் கப்பலுடன் இரண்டு போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் சுமார் 800 இராணுவப் பணியாளர்களையும் அனுப்பவுள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் கனடா இப்பயிற்சியில் இணைகிறது.

 

Related Articles

Latest Articles