டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) உள்ள வாகன சாரிதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 22) முதல் எரிபொருள் விலை 8 காசுகள் வரை குறையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 183.9 காசுகளாகக் குறையும் என En-Pro International நிறுவனத்தின் தலைமை பெட்ரோலிய ஆய்வாளர் ரோஜர் மெக்நைட் (Roger McKnight) தெரிவித்துள்ளார்.
உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் மாற்றங்கள் காரணமாக அண்மைக் காலமாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.
கடந்த மே 6 ஆம் திகதி ஏற்பட்ட 10 காசுகள் விலை உயர்வு காரணமாக, கனடாவின் தேசிய பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாக அதிகரிக்கவும் இது வழிவகுத்திருந்தது.
இந்நிலையில், நாளை ஏற்படவுள்ள இந்த விலை வீழ்ச்சியானது மே 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த விலையாக அமையவுள்ளது என CityNews தரவுகள் தெரிவிக்கின்றன.
