சர்வதேச ஹேக்கிங் கும்பலைச் சேர்ந்த 25 பேரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது
கனடா உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, சுமார் 215 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
நைஜீரியாவுடன் (Nigeria) தொடர்புடைய இந்த மோசடி கும்பல், “பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்” (Business email compromise) எனப்படும் முறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மின்னஞ்சல்களை ஹேக் செய்து வந்துள்ளது.
அமெரிக்காவின் பல மாநிலங்கள் மற்றும் கனடா (Canada) உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 215 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சல்களைக் கண்காணித்து, வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் நடக்கும்போது, உண்மையான நிறுவனத்தைப் போலவே போலியான மின்னஞ்சல்களை அனுப்பி பணத்தைச் செலுத்த வைத்துள்ளனர்.
இவ்வாறு பெறப்பட்ட பணம் ஒரு சிக்கலான வங்கி கணக்கு வலையமைப்பு மூலம் மாற்றப்பட்டுப் பின்னர் கிரிப்டோகரன்சி மற்றும் ஆடம்பரப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளது.
லொன் குட்மேன் (Lon Goodman) என்பவருக்குச் சொந்தமான New Dolton Currency Exchange என்ற நிறுவனம், வங்கிகளின் எச்சரிக்கையையும் மீறி இந்த மோசடிப் பணத்தை மாற்ற உதவியுள்ளது.
விசாரணையின் போது சுமார் 1.2 மில்லியன் டொலர் பணம் மற்றும் கிரிப்டோகரன்சி, Patek Philippe, Audemars Piguet, Richard Mille போன்ற பல இலட்சம் டொலர் பெறுமதியான ஆடம்பர கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் ஜோர்ஜியாவின் (Georgia) லாரன்ஸ்வில் (Lawrenceville) பகுதியில் உள்ள பெரிய சொகுசு வீடும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஒலுவாபெமி மைக்கேல் அவோயேமி (Oluwafemi Michael Awoyemi), அருவான் டிரேக் (Aruan Drake) மற்றும் பீட்டர் ரீட் (Peter Reed) உள்ளிட்ட 25 பேர் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இணையம் வழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
