கனடாவில் விமானப் பயணிகளின் முறைப்பாடுகளைத் தீர்க்கும் அமைப்பான Canadian Transportation Agency (CTA) எதிர்கொண்டுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாக, பயணிகள் தங்கள் முறைப்பாடுகளுக்கான தீர்வைப் பெற இனி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணிகளின் உரிமைகள் சட்டம் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, முறைப்பாடுகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
2023 இல் வழங்கப்பட்ட $76 மில்லியன் தற்காலிக நிதி இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை நீடிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
தற்போது சுமார் 95,000 முறைப்பாடுகள் தீர்வின்றி நிலுவையில் உள்ளன.
கடந்த ஜனவரி 2026 இல் மட்டும் அதிகபட்சமாக 5,685 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் Steven Mackinnon-இன் ஊடகப் பேச்சாளர், நிலைமையை அரசு கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க புதிய சட்டத் திருத்தங்களை விரைந்து கொண்டு வருமாறு Canadian Automobile Association மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.










