கனடா (Canada) சோதனைகளின்றி கோடிக்கணக்கான மக்களை நாட்டிற்குள் அனுமதித்து தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்நடவடிக்கை ஒரு “லிபரல் கைப்பற்றல்” (Liberal takeover) என்றும், இது மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், டிரம்பின் கூற்று முற்றிலும் தவறானது என கனேடிய அமைச்சர்கள் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) மற்றும் நீதித் துறை அமைச்சர் ஷான் பிரேசர் (Sean Fraser) ஆகியோர் கூறுகையில், நாட்டிற்குள் வரும் அனைவரும் பலகட்ட பாதுகாப்புச் சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், கடந்த ஆண்டை விட தற்காலிகக் குடியிருப்பாளர்களின் வருகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளனர்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு குடிவரவு எண்ணிக்கையை தீவிரமாகக் குறைத்துள்ளது.
எனவே கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1945 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவான 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக மோதல்கள் மற்றும் வரி விதிப்பு தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்ப் கனடா மீதான தனது விமர்சனங்களை அதிகரித்துள்ளார்.
