சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான கனடாவின் பிரபல தள்ளுபடி விற்பனை நிறுவனமான செலரஸ் (Zellers), புதிய உரிமையாளர்களின் கீழ் டொராண்டோவில் (Toronto) தனது இரண்டாவது புதிய கிளையைத் தொடங்கியுள்ளது.
வால்மார்ட் (Walmart) போன்ற நிறுவனங்களின் போட்டியால் 2013 இல் மூடப்பட்டு, பின்னர் 2023 இல் ஹட்சன்ஸ் பே (Hudson’s Bay) நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், தற்போது பெனிட்டா (Benitah) குடும்பம் இதன் உரிமத்தைப் பெற்று மறுஅறிமுகம் செய்துள்ளது.
பழைய நினைவுகளைத் தூண்டும் ஜெடி கரடி (Zeddy bear) பொம்மை மற்றும் புகழ்பெற்ற பர்கர் உணவுகளுடன் இந்தத் திறப்பு விழா வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில், இந்த புதிய கடைகள் வெறும் 25,000 சதுர அடியில் சிறியதாகவும், நுகர்வோருக்குத் தேவையான ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலையிலும் வழங்கி வருகின்றன.
டாலராமா (Dollarama), காஸ்ட்கோ (Costco) போன்ற குறைந்த விலை நிறுவனங்களுக்கு இணையாக, கனடிய நுகர்வோருக்கு ஒரு சிறந்த உள்நாட்டுத் தேர்வாக Zellers விளங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிராம்ப்டன் (Brampton), ஒட்டாவா (Ottawa), ஹாலிபாக்ஸ் (Halifax), வான்கூவர் (Vancouver) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த உள்ளதாக நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி ஜோயி பெனிட்டா (Joey Benitah) தெரிவித்துள்ளார்.
