ஒன்றாரியோவில் (Ontario) உள்ள பிரதான 400-வரிசை நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் வேக வரம்பை மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றராக (110 km/h) அதிகரிப்பதற்கு பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாற்றங்கள் ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மாகாணத்தின் 900 கிலோமீற்றருக்கும் அதிகமான நெடுஞ்சாலைப் பகுதிகளில் இந்த வேக வரம்பு நிரந்தரமாக அதிகரிக்கப்படும் என்பதை போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா (Prabmeet Sarkaria) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய முதற்கட்ட மாற்றங்கள் இந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் நெடுஞ்சாலை 401 (மற்றும் நெடுஞ்சாலை 416 ஆகியவற்றின் சில பகுதிகளில் அமலுக்கு வரவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஜூலை 31, ஆகஸ்ட் 21, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய திகதிகளில் 400, 403, 404 மற்றும் கியூ.ஈ.டபிள்யூ (QEW) உள்ளிட்ட மேலும் பல முக்கிய நெடுஞ்சாலைகளின் பகுதிகளிலும் இந்த 110 கி.மீ வேக வரம்பு விரிவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
