கனடாவில் குடிவரவு ஆலோசகர்களை (Immigration Consultants) முறைப்படுத்தும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக Ottawa அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக, சர்வதேச மாணவர்கள் உட்பட பலர் குடிவரவு மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்ட Abhishek என்ற இந்திய நாட்டவர் கூறுகையில், ஆலோசகர்கள் தங்களுக்கு ஒழுங்காக வழிகாட்டாமல் வியாபார நோக்குடன் செயல்படுவதாகவும், கனடாவில் தங்குவதற்கு தன்னிடம் $100,000 வரை கோரியதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
CICC அமைப்பிடம் ஆலோசகர்கள் மீது புகார் அளித்தால் தங்களின் குடிவரவு நிலைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பாதிக்கப்பட்டவர்கள் பயப்படுவதாக British Columbia-வைச் சேர்ந்த வழக்கறிஞர் Eoin Logan தெரிவித்துள்ளார்.
மேலும், CICC அமைப்பிற்கு ஆண்டுக்கு $24 மில்லியன் வரவுசெலவுத் திட்டம் இருந்தும், அவர்கள் தங்களுக்குரிய அதிகாரங்களை ஏன் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஓராண்டில் CICC அமைப்பிற்கு 1,211 புகார்கள் வந்தபோதிலும், வெறும் 15 ஒழுங்கு நடவடிக்கைள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போதைய புதிய விதிமுறைகள் மூலம் கடுமையான தண்டனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி (Compensation Fund) போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
