இலங்கையின் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு, ஈழத்தமிழர் தயாரிப்பிலும், இயக்கத்திலும் இந்திய கலைஞர்கள் இணைந்து படைத்துள்ள அந்தோணேி திரைப்படம் மார்ச் 14ஆம் திகதி கனடாவில் திரையிடப்பட்டது.
அரங்கம் நிறைந்த ஈழத்து சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், சுவிசர்லாந்தில் வாழ்ந்து வரும் ரமனதாஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில், சுகிர்தன் மற்றும் ஜெனோசன் ஆகியோரின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
படத்தின் ஒரு காட்சியில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஆண்டுதோறும் உழைத்துச் சேர்த்துவைத்துவிட்டு, தாயகம் திரும்பி, சேமிப்பைச் செலவழித்து ஒருநாள் கொண்டாடும் அந்த ‘புதுப்பித்தல்’ உணர்வு, ஒரு காட்சியில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
“அங்கே இருக்கிற மிச்சக் காலத்தைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஒரு நாள் மகிழ்ச்சிதான்” என்கிற வசனம், லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் ஆன்மாவைத் தொடும் ஓர் உணர்வுத் தருணம். இதைப் போல நிதர்சனங்களை மறைமுகமாகப் பேசும் இப்படத்தின் கதையோ நம் மனதில் படம் முடிந்தும் நிலைத்து நிற்கிறது.
‘விடுதலை’ படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜா வழங்கியிருக்கும் ஓர் இசைப் பொக்கிஷம் இந்தப் படம்.










